Saturday, September 6, 2008

பெரியார்: அரசுடமையும், விவாதங்களும்








பெரியார் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையால் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


அம்பேத்கர் நூல்களை அரசுடமை ஆக்கி இருப்பது போல் பெரியார் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் முதன் முதலில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தினமணியில் எம். பாண்டியராஜன் எழுதினார்.
இந்தக் கோரிக்கை எழுப்பபட்டு, விவாதிக்கப்பட்டு, ஆர்பாட்டம் நடந்து வருகிற சூழலில் வயதான ஒரு திராவிட இயக்க தோழரை சந்தித்த போது கோபமாக தம் ஆற்றமையை வெளிப்படுத்தினார்.


‘பெரியார் ஒவ்வொரு பைசாவாக இயக்கத்துக்குச் சேர்த்தார். அவர் காசு வாங்கிக் கொண்டுதான் குழந்தைகளுக்கே பெயர் வைத்தார். புத்தக விற்பனையையும் அப்படியே பார்த்தார். இதெல்லாம் எதற்கு செய்யணும்? இந்த இயக்கம் தொடர்ந்து இருக்கணும் என்பதற்குதான்’ என்றார் அந்தப் பெரியவர்.


மகாத்மா காந்தியின் நூல்களையும், ரவீந்திரநாத் தாகூரின் நூலையும் இதுவரை அரசுடமை ஆக்கவில்லை. இவர்களின் நூல்கள் ஒரு டிரஸ்டின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் அந்த நூல்களை யாராவது மறுமதிப்பு செய்தால் கூட பெரிதாக அவர்கள் கண்டு கொள்வதில்லை. இப்போது பெரியாரின் நூல்களும் இதே மாதிரிதான் உள்ளன.


அம்பேத்கரின் நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. சில காலத்திற்கு பிறகு இன்றைக்கு வரைக்கும் 15 ஆம் தொகுதிகள் வரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட நிறுவனத்திடம் மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால் பதில்தான் இல்லை. தலித் இயக்கங்கள், தலித் பத்திரிகைகள் கூட இதை கண்டு கொள்ளவில்லை. நாளை பெரியாரின் நூலுக்கே கூட இதே நிலை நேரலாம்.


பெரியார் திடலில் திராவிட இயக்கத்துக்கென்று ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்தி இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுயமரியாதை திருமணம், கல்வி, திராவிட வகை உணவுகள் என்று. இதற்காக திராவிடர் கழகம் செய்வதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. குறைகள் இருக்கிறது.


பெரியார் புத்தகத்தை விட கி.வீரமணி புத்தகத்தை நல்ல தாளில் நல்ல பைண்டிங்கில் வெளியிடுவது, போனால் போகிறது என்று ஏனோதானோ என்று பெரியார் நூலை வெளியிடுவது. இது போன்ற குறைகளுக்கு பெரியார் திடல் பொறுப்பேற்க வேண்டும். பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சக்திகளுக்கு எதிராக எந்த பெரிய செயல்பாடுகளிலும் தி.க. ஈடுபடவில்லை. திராவிடக் கட்சிகளுக்கு பாசறையாக தி.க. இல்லாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் இருக்கின்றன.


அரசுடமை ஆக்கப்படுவது என்பது ஒரு விலை கொடுத்து பெரியாரின் சிந்தனைகளை அரசு வாங்கிக் கொள்வது. அந்த படைப்புகளை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதனால் யார் பலனடையப் போகிறார்கள்? இது பெரியாரை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி. அடுத்து அரசு கொடுக்கும் பணத்தில் காலம் முழுதும் பெரியார் திடலில் செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ஈடு கொடுக்க முடியுமா?
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் இது பற்றி ஆனந்த விகடனில் கூறும் போது அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார். அரசு முடிவு எடுத்தாலும் அரசு உடமை ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவோம் என்று கி. வீரமணி சொல்லாதது பெருத்த ஏமாற்றம் தான்.


அரசுடமை ஆக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அரசுடமை ஆக்கிய பிறகு அந்த படைப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அளவுகோல்கள் எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் திராவிடர் கழகம் இயக்கம் சார்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கையே தவிர இதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. அதே நேரம் வே. ஆனைமுத்து வைத்திருக்கும் பெரியாரின் எழுத்துக்களைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை.


வே. ஆனைமுத்து என்கிற தனிநபருக்கு பெரியார் ஒப்புதலோடு கொடுக்கப்பட்ட அந்த ஆவணங்கள் ஒரு முறைதான் பிரசுரமாகி இருக்கும். அதற்கு பிறகு வரவில்லை. திராவிடர் கழக வெளியீடுகளை விட, வே. ஆனைமுத்து தொகுப்பில் உள்ளவைகளை ‘ஆத்தண்டி’க்காக கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நானும், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரும் வே. ஆனைமுத்துவிடம் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டு வாருங்கள், பணம் கூட ஏற்பாடு செய்து தருகிறோம். அந்தப் பணத்தை இனாமாக தரவில்லை. புத்தகமாகவே வாங்கி கொள்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வீட்டை விட்டு வெளியே போங்கள் என்ற பதில்தான் வந்தது.


இதைப் பற்றி எந்த கோரிக்கையும் ஏன் எழவில்லை என்றால் அது தனி நபர் சார்ந்த விஷயம். பெரியாரே கொடுத்து விட்டார். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்கிற பதில் தான் கிடைக்கிறது.


ஒரு இயக்கம் சார்ந்து, தனிநபர் சார்ந்து ஒரே அடித்தளம் மீது அமைந்த கோரிக்கை வேறுபட்டது எதனால்? இரண்டு இயக்கங்களுக்கு உள்ள ‘ஈகோ’ வைத் தவிர வேறு என்ன? அரசுடமை ஆக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சூழலுக்கு என்ன பதில் யாரிடம் இருக்கிறது?
கி. வீரமணி புத்தகங்களுக்கு இருக்கும் மரியாதை கூட பெரியார் புத்தகங்களுக்கு பெரியார் திடலில் இல்லை என்ற வாதம் உண்மையானதுதான். இது போன்ற குறைகளை பெரியார் திடல் களைய வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் முழுதும் செம்பதிப்பாகவும், மக்கள் பதிப்பாகவும் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பெரியார் திடலில் பெரியாரின் ஒரு நல்ல படம் கூட கிடைக்கவில்லை என்ற பிரச்சனைகள் களையப்பட வேண்டும். தவறுகள் இருக்கலாம். ஆனால் திருத்த முடியாத தவறுகள் இல்லையே?


பெரியாரின் எழுத்துக்களை அரசுடமை ஆக்குவது என்பது பெரியாரை குழி தோண்டி புதைக்கும் முயற்சியே இது. பெரியாரின் பேரன் இ.வி.எஸ். இளங்கோவனும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனார்.


ஒரு காங்கிரஸ்காரனின் சிந்தனையும், ஒரு தந்தை பெரியார் திராவிட கழகக்காரனும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அரசியல்தான் என்ன?

2 comments:

த.அரவிந்தன் said...

//இதனால் யார் பலனடையப் போகிறார்கள்? இது பெரியாரை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி. அடுத்து அரசு கொடுக்கும் பணத்தில் காலம் முழுதும் பெரியார் திடலில் செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ஈடு கொடுக்க முடியுமா?//

நீர்த்துப் போகும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. அரசுடைமை என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதே தவறான ஒன்றாகும். நாட்டுடைமை என்றுதான் சொல்ல வேண்டும். நாட்டுடைமை என்பது ஒருவருக்கு மட்டுமே விட்டுக்கொடுத்தல் அல்ல. எல்லோரையும்போல் கி.வீரமணிக்கும் பெரியார் நூல்களை வெளியிடுகிற உரிமை கொடுப்பதுதான். பெரும்பாலோனோர் வெளியிடுகிறபோது பெரும்பாலானோரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது. கி.வீரமணி மட்டுமே பெரியார் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தால் யாருக்கு என்ன பயன்? நான், நீங்கள், ரோட்டில் போகிற எல்லோருமே உச்சரித்து அதன்படி நடந்தால்தான் பெரியார் கருத்து பரவும். அதைப்போல்தான் நூல் வெளியிடுவது என்பதும். பெயர் வைப்பதற்கும் பெரியார் பணம் வாங்கினார். அது இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துவதற்குத்தானே என்கிற சப்பக்கட்டு வாதமும் ஏற்புடையதல்ல. வீரமணியும் குழந்தைகளுக்குப் பெயர் சம்பாதிக்க வேண்டியதுதானே! எவன் தருவான்? பெரியார் கஞ்சர். பணத்தில் கறார் என்றெல்லாம் சொல்கிறவர்கள். கள் கெடுதல் என்பதற்காக தன்னுடைய சொந்தத் தோப்பில் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டினார் என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறார்கள். பணம் பார்க்கிறவராக இருந்தால் அப்படிச் செய்திருப்பாரா? உங்கள் கருத்துப்படி பெரியார் நூல்கள் எல்லாம் தொடர்ந்து இயக்கங்களை நடத்துவதற்காக என்று எடுத்துக் கொண்டால், டெல்லியில் பெரியார் மையம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அசையாச் சொத்துக்கள் மூலம் வருகிற வருவாய் எல்லாம் வீரமணி சுகவாழ்வு வாழ்வதற்காக பெரியார் விட்டுப்போனவையா?

Pandia Rajan M said...

நன்றி முத்து!
நினைவுகூர்ந்ததற்கு!!