Saturday, August 30, 2008

ரஜினியும் தமிழ் சினிமாவும்




குசேலன் படம் ரஜினி படம் என்று சொல்லி வியாபாரமாக்கப்பட்டது. கூடுதல் விலை கொடுத்து வாங்கினவர்களுக்கு நஷ்டம். அதுவும் கர்நாடகாவில் மன்னிப்பு கேட்ட பிறகு படத்துக்கு பெரும் அடி என்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்பதாகவும் செய்திகள் வருகின்றன.


செய்தியின் பின்னணியோ வேறு மாதிரியாக இருக்கிறது. ரஜினியின் படம் என்று பொய் சொல்லி இருந்தாலும் இதில் காணாமல் போனது என்னவோ நல்ல கதையும் சினிமாவும்.
விலையை கூட கொடுத்து விட்டோம். நஷ்டம் சிறிதானலும் தாங்கிக் கொள்வோம். ஆனால் தாங்க முடியாத நஷ்டம் என்று கூறும் விநியோகிஸ்தர்கள் லாபம் வந்தால் ரஜினியிடம் கொடுத்து விடுவார்களோ என்று ரஜினி ரசிகனின் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது என்று தெரியவில்லை. சிவாஜி பட நஷ்டத்தை திரும்பிக் கொடுத்த ரஜினிதான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். குசேலன் விவகாரத்தில் பணத்தை திரும்பி கொடுக்க கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் உலாவுகின்றன.


பிரமிட் சாய்மீரா நிறுவனம் 60 கோடிக்கு வாங்கி 65 கோடிக்கு விற்றதாக தகவல். இவ்வளவு பெரிய தொகை பத்து சதவிகிதம் கூட லாபம் இல்லாத ஒரு வியாபாரத்தை செய்ய முடிந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது?
இத்தனையும் மீறி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் குதிரைக்கு ஒரு விலை யானைக்கு ஒரு விலை என்பது மாதிரி ரஜினி படத்துக்கென்று ஒரு டிக்கெட் விலை. தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் மூட்டை பூச்சிகளின் நடுவில், வியர்வை நாற்றத்தில் தங்களின் கனவு நாயகனை கண்டு களிக்கின்றனர். கழிவரை பக்கங்களே போகவே முடியாத அளவுக்கு துர் நாற்றம். இன்னொரு பக்கம் ஏ.சி. தியேட்டர் என்று சொல்லிவிட்டு படம் ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரம் ஏசியை ‘ஆப்’ செய்து விடுவார்கள். கேட்டால் நம்மை சுற்றி ஐந்து ஆறு அடியாட்கள் வருவார்கள்.


கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய தியேட்டர்களின் நிலமை வேறு ஒரு ரகமாக இருக்கிறது. இந்த தியேட்டருக்குள் எந்த பொருளையும் (கைபை உட்பட) கொண்டு போகக் கூடாது. ஒரு பார்கான் 35 ரூ. டிக்கெட் 40ரூ. மதுரையில் இந்த நிலமை உள்ள தியேட்டர் சாமானிய மனிதனுக்கோ நடுத்தர வர்க்கத்தினருக்கோ எந்த வகையில் சரியாக இருக்கும்?
விநியோகஸ்தர்களுக்கோ, தியேட்டர்காரர்களுக்கோ எல்லாப் படங்களுமா நஷ்டத்தை உண்டு பண்ணி விட்டது? எந்த மக்களிடம் காசு வாங்குகிறார்களோ அந்த மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்ய மறுப்பதுதான் தொழில் தர்மமா? படம் சரியில்லை என்றோ தியேட்டரில் வசதி சரியில்லை என்றோ பணத்தை திருப்பி கேட்டால் என்ன தப்பு?
படத்தின் பெயரில் தமிழ் இருந்தால் கேளிக்கை வரியை அடியோடு ரத்து என்று சலுகையால் சமானிய மக்களுக்கு குறைந்த விலையில் படம் காண்பிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி ஒதுக்கப்பட்ட இடங்கள் சில நாட்களிலே காணாமல் போயின.


அந்த கொள்ளையில் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பங்கு இல்லையா?
ஒரு திரைப்படத்திற்கும், பார்வையாளனுக்கும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் ரஜினி அதிகம் சம்பாதித்து விட்டார். தமிழகத்தில் எந்த முதலீடும் இல்லை. கர்நாடகத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையில், என் படம் கர்நாடகாவில் ஓட வேண்டாம் என் சம்பளத்தில் குறைத்துக் கொள்வேன் என்று நடிகர் சத்தியராஜ் சொன்ன தகவல் எல்லாம் சேர்ந்து இந்த பிரச்சனையை உக்கிரத்திற்கு கொண்டு சென்றது.


எந்த மனிதன் வெற்றி பெறுகிறானோ அவன் சொல்வதே வேத வாக்கு என்று சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஜினியும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான். அவர் ஜெயிக்கும் குதிரை. குதிரை ஓட வேண்டுமானால் குதிரை கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். கொடுத்தார்கள். ஓட வில்லை.


பணம் கொடுத்தது யார் தப்பு? ஜெயிக்கும் குதிரை நான் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பேன். என் மீது பணம் கட்டுங்கள் என்று கூப்பாடு போட்டது உண்டா?
ரஜினியின் முதலீடுகள் கர்நாடகாவில் அதிகம். கன்னடர்களுக்கு எப்போதுமே ஆதரவானவர்.


ரஜினியை விமர்சித்தால் அவருடைய ரசிகர்கள் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அவர் ப.ஜ.க. வை ஆதரிப்பவர் என்ற வகையில் ரஜினி தன் நிலையை எப்போதுமே வெளிபடுத்தி உள்ளார். அதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் தெரிந்து கொண்டே ரஜினி மீது பணத்தை கட்டிவிட்டு தமிழ் பேசும் மக்களின் காசை எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களின் கணக்கு தப்பாகி விட்டது. அந்த நஷ்டத்திற்கு திரை உலகத்தினரே பொறுப்பு ஏற்க வேண்டும். ரஜினி சல்லி பைசா கூட திரும்ப கொடுக்கக் கூடாது.


கடைசியாக வந்த ஜீனியர் விகடன் சர்வேயில் ரஜினி மீதான அரசியல் எதிர்பார்பு ஊடகங்களால் ஏற்பட்டது என்று 47.72 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இந்த ஊடகங்களின் அரசியலையும், திரை உலகினர் அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது.


நல்ல வேளை திரும்பவும் மக்கள் புத்திசாலி என்று நிருபித்து விட்டார்கள்.


பின் குறிப்பு:
உலக சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் மலையாளத்திலோ, கன்னடத்திலோ, தெலுங்கிலோ, ஹிந்தியிலோ, ஜப்பானிய மொழியிலோ வரட்டும். அந்தப் படம் அபார வெற்றி பெறட்டும். ஏனெனில் அவர்தான் உலக சூப்பர் -ஸ்டார் ஆயிற்றே. 04:48:00

2 comments:

தமிழ்மகன் said...

உங்கள் விமர்சனக் கட்டுரையில் சிவாஜி படத்தின் நஷ்டத்தை ரஜினி ஏற்றுக்கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள். பாபா படத்துக்குதான் அப்படி செய்தார். கமல் கண்டித்ததும் அப்போதுதான்.

தமிழ்மகன்

த.அரவிந்தன் said...

ஞானியை படித்து எழுதியதால் வந்த விளைவு?