Tuesday, October 7, 2008
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லையோ?
கல்கத்தாவில் ஹாரிஸன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் பங்களாதேஷ்யை சேர்ந்தவர்கள். அதிலும் அம்மா மிகப்பெரிய பணக்கார நிலபிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணாகவும், அப்பா கீழ்தட்டு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அப்பா மருத்துவம் படித்து டாக்டராக பணிபுரிந்தவர். இரண்டு பெரியப்பாகளும் சட்டத்துறை சேர்ந்தவர்கள். அரசியல் என்பதே சுத்தமாக தெரியாது.
இப்படிப்பட்ட குடும்பத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் முக்கியமானவர்களில் ஒருவராக வந்தவர்தான் ஜோதிபாசு.
இவருக்கு கிட்டத்தட்ட 94 வயது. ஐந்துமுறை முதல்வராக இருந்தவர். தன் உடல்நிலையைக் கருதி தானாகவே முதல்வர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர். யார் அந்த ஜோதிபாசு? என்று கேள்வி கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அன்றைய நடுத்தர மக்க்ளின் கனவாக லண்டன் சென்று படித்து ஐ.சி.எஸ். ஆவது என்பதுதான். இந்த பட்டியலில் இந்திராகாந்தி ஜோதிபாசு, கே.டி.கே. தங்கமணி, சீ.ப. ஆதித்தனார் மோகன் குமராமங்கலம் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
லண்டன் சென்ற ஜோதிபாசு அங்கு ஐ.சி.எஸ். படித்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. சட்டம் படித்து தேர்விலும் வெற்றி பெற்றார். இதில் முக்கியமான விஷயம் என்றால் லண்டன் சென்று படித்து திரும்பி வந்தவர்களில் பாதிப்பேர் கம்யூனிஸ்ட் ஆனார்கள் என்பதுதான். ஜோதிபாசுவும் அப்படித்தான்.
லண்டனில் இருந்தபோது நேருவை சந்தித்தது, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்தது அவரை உருக்கு மனிதனாக மாற்றியது.
தேச விடுதலைப் போராட்டத்தில் மேச்சு பஜார் என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. அந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு நீதி மன்றத்துக்கு ஜோதிபாசுவின் பெரியப்பா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் அப்பாவே எதிர்த்தார். இந்த நிகழ்வைப் பற்றி ஜோதிபாசு கூறும் போது ‘சிறுவர்களாக இருந்ததால் எதுவுமே தெளிவாக தெரியாது என்றாலும் பிடிக்கவில்லை. காவல்துறையினர் சோதனை செய்கிறபோது தடைசெய்யப்பட்ட புத்தகங்களை கைப்பற்றுவது வழக்கம். அந்த புத்தகங்கள் எல்லாம் பெரியப்பாவின் மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும். அவர் வெளியே சென்றவுடன் ஒரு நோட்டம் விட்டு வைத்து விடுவோம்.
எனது உறவினராக தேவப்பிரிய பாசுவும் நானும் ரகசியமாக ஒரு கடிதத்தை தயார் செய்தோம். அதை நாங்களே தட்டச்சு செய்தோம். அந்தக் கடிதத்தில் நீங்கள் வங்காளியாக இருந்தபோதிலும் தேசபக்தர்களுக்கு துரோகம் செய்கிறீர்கள். இது முற்றிலும் தவறானது. உங்கள் உயிருக்கு எப்போதுமே ஆபத்துதான். இந்த கடிதம் பெரியப்பாவின் கையில் கிடைத்தவுடன் விஷயம் வெளியே பரவி விட்டது. எனது பெற்றோர்கள் கவலை அடைந்தனர். எங்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவர் தினசரி செல்லும் நடைபயிற்சியும் நிறுத்தப்பட்டது.
தேச விடுதலைப் போராட்டத்திற்குகிடையில் ரயில்வே தொழிற்சங்கத்தில் பணியாற்றுகிறார். அப்போது வரி செலுத்துபவர்களும், பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும். சர்வஜன வாக்குரிமை கிடையாது. தொழிலாளர் தொகுதியில் ஜோதிபாசுவை போட்டியிட சொன்னது கட்சி. ‘போட்டியிடுவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. ஆனால் கட்சி சொன்னதால் போட்டியிட்டேன். கட்சியும், மக்களும் என்னை வெற்றி பெற வைத்தார்கள்’ என்கிறார்.
அன்றாட பணிகளை முடித்துவிட்டு, தினசரி கட்சி அலுவலகத்திற்கு சென்று நடந்தவற்றை சொல்வேன். அவ்வப்போது தலைமையின் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்கிறார் ஜோதிபாசு.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக இருந்தது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் தூண்டுகோல் இல்லாமல் இது நடக்க வாய்பில்லை. கலவரம் துவங்கிய பிறகு அனைத்துக்கட்சிகள் உள்ளடக்கிய அமைதிக்கான குழு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. 1947_இல் பெலியக்கட்டாவில் காந்திஜி தங்கியிருந்த போது எல்லோரும் சந்தித்தனர். நானும், புபேஷ்குப்தாவும் சந்தித்தோம். அப்போது அவர் அனைத்துக் கட்சி குழுவை அமைப்பதும், அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை பேரணி நடத்துவதும் மிகச் சிறந்ததாகும் என்று காந்திஜி கூறினார். ஆனால் அனைத்துக் கட்சி ஒற்றுமையின்மையால் சாத்தியமாகவில்லை.
சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தல்கள் ஆரம்பத்தில் சவலாக இருந்தன. எங்கள் கட்சித் தோழர்கள் பலர் உயிர் இழந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டனர். ஆனாலும் மக்கள் எங்களோடு இருந்ததால் வெற்றி பெற்றோம்.
ஒரு தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சி அமைக்க வாய்பில்லை. ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன்ஐக்கிய முன்னணி அரசு அமைக்க வாய்ப்பு இருந்தது. சிபிஎம், சிபிஐ, ஆர்.எஸ்.பி. பார்வட் பிளாக், ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, தெலுங்குதேசம், த.மா.க., அசாம்கண பரிஷத், தி.மு.க., திவாரி காங்கிரஸ் மகாராஷ்டிரவாதி மோண்டக் கட்சி ஆகிய கட்சிகள் சேர்ந்து ஐக்கிய முன்னணி உருவாக்கின. இவை 187 இடங்கள் பெற்ற ஒரு மிகப் பெரிய குழுவாக இருந்தது. ஆனால் அருதி பெரும்பாண்மை இல்லை. காங்கிரஸ் வெளியிலிருந்து கொடுக்கும் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது. அந்த அரசுக்கு நான் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினர். கூட்டணி அரசிற்கு நான் பொறுத்தமானவன் என்றும், அதற்கான அனுபவம் உண்டும் என்றும் கருதினார்கள்.
இதையட்டி மே 13ஆம் தேதி அன்று தில்லியில் கட்சியின் மத்தியகுழு கூடியது. தீவிர விவாதம் நடந்தது. சுர்ஜித்தும் நானும் அரசாங்கத்தில் பங்கேற்பதை ஆதரித்தோம். ஆனால் பெரும்பாலன கட்சி உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்றனர். அதுவே அதிகாரப்பூர்வ கருத்தாக இருந்தது. இந்த கருத்தை அவர்களிடம் சொன்னோம். பிறகு எச்.டி. தேவ கௌடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு பின்தங்கிய மாநிலமான மேற்கு வங்கத்தில் எல்லாவற்றையும் ஆரம்பித்திலேர்ந்து செய்ய வேண்டியதாயிருந்தது. ஒரு மாநிலத்தின் அதிகாரம் என்பது மிகக் குறுகியது. இதற்குள்ளாகவே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள்.
இந்த செய்திகள் எல்லாம் ஜோதிபாசு எழுதிய ‘நினைவிற்கு எட்டிய வரை.... ஓர் அரசியல் சுயசரிதை’ என்ற நூலில் உள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மேற்குவங்க போக்குவரத்து அமைச்சர் சுபாஷ்சக்ரவர்த்தி கூறும்போது வரலாற்றில் தனி நபர் பங்கு முக்கியமானது. ஆனால் தனி நபர்களின் பங்களிப்பைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி நபர்களும், தலைவர்களும் முக்கியமானவர்கள். தலைமை பண்பு மிக முக்கியமானது. அதனால்தான் ரஷ்யாவில் லெனினும், சீனாவில் மாசேதுங், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமினும், மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு வரலாற்றில் முக்கியத்துவத்தை பெறுகின்றனர் என்றார்.
இந்த புத்தகத்தில் சில இடங்களில் வலது கம்யூனிஸ்ட் கட்சி, டாங்கே கும்பல் போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகம் வங்காள மொழியில் 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
1992_ல் இடதுசாரி ஒற்றுமைகள் வந்துவிட்டன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிடாமல் வலது கம்யூனிஸ்ட் கட்சி என்ற சொல்லை இவ்வளவு பெரிய தலைவர் அந்த வார்த்தையை பயன்படுத்தினரா அல்லது மொழி பெயர்ப்பாளரின் வேலையா என்று தெரியவில்லை.
அடுத்து டாங்கே கும்பல் என்று ஒரு வார்த்தை வருகிறது. டாங்கே ஒரு பிரமாண குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு மலைவாசி மக்களிடையே பணியாற்றியவர். அவர் பணியாற்றி விட்டு நடு சாமத்தில் வந்தாலும் குளித்தால்தான் வீட்டுக்குள்ளே அனுமதிப்பர். டாங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்தவர். அந்த கட்சியை டாங்கே கும்பல் என்று குறிப்பிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது? எதிரியாக இருந்தாலும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதுதானே அரசியல் அறம்.
மேலும் இந்த புத்தகத்தில் முதலாளித்துவ அரசுஅமைப்பில் பங்குகொண்ட கம்யூனிஸ்ட்கட்சி
அதனுடைய உயிர்நாடியான வர்ககபோராட்டத்தில் முன்னேடுத்து செல்ல எந்த விதத்தில்
உதவியிருக்கிறது என்பதற்து பதில் இல்லை. தேர்தல் அரசியலை பற்றி முழுமையாக
சொல்லுகிறது இந்த புத்தகம்.
மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி தொடர்ந்து நீடிப்பதன் மர்மம் என்ன? பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கடுமையான அரசியல் சவால்களை மேற்கு வங்கம் எதிர்கொள்வது ஏன் போன்ற கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் விடை உள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லையோ?
என்ற இந்த சாதாரண முதலாளித்துவ சொல்லாடலை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment