Thursday, November 6, 2008

பறிபோகும் மாநில உரிமை




அண்மையில் ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மை பற்றி அங்கொன்றும், இங்கொன்றும் செய்திகள் செய்தித்தாள்களில் தென்படுகின்றன. கடற்கரை மண்டல மேலாண்மை என்றால் என்ன? இதைப்பற்றி அண்மைக்காலச் செய்திகளும், அதைப்பற்றிய விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்குச் சற்றே நீண்ட வரலாறு உண்டென்றாலும், இதைப் பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்திலே மட்டும் வெளியாகி உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பை நடுவண் அரசு அமைத்த கமிட்டி அறிவித்துள்ளது.இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 1991ஆம் ஆண்டு கடற்கரை மண்டலங்களில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்காக ஒரு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏழு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

அவை (1) வோரா கமிட்டி (1992) (2) பாலகிருஷ்ண நாயர் கமிட்டி (1996) (4) சுல்தானா கமிட்டி (1997) (5) சுக்தங்கர் கமிட்டி (2000) (6) சுக்தார் கமிட்டி (2000) (7) ஆற்காடு இராமச்சந்திரன் கமிட்டி மேற்கண்ட குழுக்கள் 1991 ஆம் ஆண்டு அறிவிப்பாணையில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2004இல் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த சாமிநாதன் குழு மேலே குறிப்பிட்ட ஏழு கமிட்டிகளின் பரிந்துரைகளை ஆய்வு செய்தல், மற்ற நாடுகளில் கடற்கரை மேலாண்மைகளை ஆய்வு செய்தல், இவைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் சார்ந்து நம் நாட்டிற்கு பொருந்தக்கூடிய வழிமுறைகளை தெரிவித்தல் ஆகிய பணிகளை ஏற்றது. இவற்றுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் (1986ஆம் ஆண்டு) அடிப்படையாகக் கொண்டு 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் எனவும் பரிந்துரைத்தது. இந்தக் குழுவில் 12 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழு சில பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானவைகளில் சிலவற்றைக் காணலாம்.

சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம், பண்பாடு, தேசிய பாதுகாப்பு ஆகிய நான்கும், ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மையில் தூண்களாக இருக்க வேண்டும்.

கடற்கரை மண்டலம் என்பது நிலப்பரப்புடன் கூடிய கடற்கரையிலிருந்து 12 கடல்மைல் (1 கடல் மைல் என்பது சுமார் 1.85 மைல் தூரம்) தூரமுள்ள கடல் பகுதியைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் நிலப்பகுதியில் கடல்நீர் ஓதத்தின் மூலம் செல்லும் நீர்நிலைகளையும் கடற்கரை மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.

ஒழுங்குமுறை (என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு) : கல்வி, அறிவு மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகிய மூன்றும்
வளங்குன்றா கடற்கரை மண்டல மேலாண்மையில் முக்கியப் பகுதிகளாக இருக்க வேண்டும். மக்கள் பங்கேற்பு மற்றும் கல்வி அறிவு ஆகியவற்றில் ஊராட்சியும், மக்கள் பஞ்சாயத்தும் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

கடற்கரை மண்டல மற்றும் கடல்சார்ந்த இயற்கை வனங்களின் பாதுகாப்பு, வளம் குன்றா வகையில் பயன்படுத்துதல் ஆகியவை சர்வதேச உடன்பாடுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். கடற்கரையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இது போன்ற 12 பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.

கடந்த மே மாதம் 13ஆம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையதளத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை வெளியிட்டு அறுபது நாட்களுக்குள் மக்களிடம் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளனர். ஆனால் முதலில் இந்தக் குழுவின் அறிக்கை தனியார் இணையதளத்தில்தான் வெளியிடப்பட்டது.

இதற்கு அடுத்ததாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் 21.08.2008 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகள் மூலம் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும் மீன்பிடித் தொழிலுக்கான பாதுகாப்பு பற்றிய, விதிமுறைகளைப் பரிந்துரை செய்யவில்லை. எல்லையோரக் கடல் அனைத்தும் இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இனிமேல் மாநில அரசின் உரிமை பறிபோகும். இந்தியாவில் மீன்பிடித் தொழில் செய்துவரும் மீனவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பான உயிர்காக்கும் உடைகள், மிதவைகள், தகவல் தொழில்நுட்ப சாதனம் எதுவும் இல்லை. இந்நிலையில் உலக நாடுகளில் நவீன விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வருகின்றன. உலக நாடுகளில் மீனவர்கள் துறைமுகம் சார்ந்த மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் தங்கள் வாழ்விடங்களிலேயே மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த மாதிரி நிறைய முரண்பாடுகள் இருக்க, உலக நாடுகளில் உள்ளது போல் கடற்கரையைக் கொண்டு வரப்போவது என்பது ஐந்து நட்சத்திர விடுதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மீன்பிடித் தொழிலில் இறங்குவதற்கான வேலையோ என்ற அச்சம் இயற்கையாகவே எழுந்துள்ளது.

இந்தியாவில் கடற்கரையோரப் பகுதி என்பது சுமார் 8000 கி.மீ. ஆகும். இதன் மூலம் அந்நியச் செலவாணி பல கோடிகளுக்கு மேல் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் சுமார் நான்கு கோடிக்கு மேலான மக்கள் தொகையினர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கெனத் தனி அமைச்சகம் கூட நடுவண் அரசிடம் இல்லை. மாநில அரசிடம் அமைச்சகம் உண்டு.

கடற்கரை மேலாண்மையில் எல்லை என்பது கடலுக்குள் 12 கடல் மைலையும், நிலப்பரப்பில் அந்த அந்த பகுதி பஞ்சாயத்து எல்லைகளையும் உள்ளடக்கியது. உதாரணமாகச் சென்னைக் கடற்கரைப் பகுதி என்பது திருவொற்றியூர் பஞ்சாயத்து, சென்னை மாநகராட்சி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதன் எல்லைகள் எவ்வளவு தூரமோ அந்த அளவு கடற்கரை மேலாண்மை எல்லையைச் சார்ந்தது. இந்தக் குழுவின் பரிந்துரையைக் கேரள அரசு ஏற்கமுடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டது.

தமிழக அரசு இந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தைக் கேட்டுள்ளதாகச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நமக்கு கிடைத்த சில தமிழ் மொழிபெயர்ப்புகளை வைத்தே இந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளோம். இதில் கடலோரமாகக் காலம் காலமாக வாழந்துவரும் மீனவர்களின் கருத்துகள் எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை எம்.எஸ்.சாமிநாதன் குழுவால். தமிழக அரசு இந்தக் குழுவின் அறிக்கையைத் தமிழில் கேட்டிருப்பது நல்ல முடிவு. தமிழில் வந்தவுடன் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் கணக்கில் கொண்டும், மாநிலங்களின் உரிமை பறிபோகாமலும் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மீனவர்களும் விரும்புகின்றனர்.

No comments: