Thursday, August 22, 2013

புரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’! முத்தையா வெள்ளையன் சின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது: ஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர். 1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி. தம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி. தாய்நாடு திரும்பிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர். போராட்டம்… 1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்: உலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்: அவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது. கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது. இதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார். அங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா? 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்?!

No comments: