Saturday, August 30, 2008

சென்னை: காணாமல் போகும் தமிழன்




சென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின் அரசியலையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய சென்னை மாநகரம், அன்று மதராசாபட்டினமாக இருந்தபோது பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகத்தை நிறுவும் முயற்சியில் மதராசபட்டினத்தில் உள்ள கடலோரச் சிற்றூரைச் சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வாங்கினர். இதற்கான ஒப்பந்தம் சந்திகிரிக் கோட்டையில் கையெழுத்தானது.
கிழக்கிந்திய நிறுவனம் வாங்கிய இடத்தில்தான் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் வாங்கி பிறகு அந்தப் பகுதியில் சரக்குகள் ஏற்றவும், இறக்கவும், பயணிகள் வந்து போகவும் துறைமுக வசதிகள் செய்யப்பட்டன.
18_ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் முழுமையாக நிலை பெற்று விட்ட நிலையில் மேய்ச்சல் நிலமாக இருந்த மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம் ஆகிய சிற்றூர்கள் நகர விரிவாக்கத்திற்கு உட்பட்டன.
மன்னர்களின் ஆட்சியில் தலைநகரங்களும், நகரங்களும் இருந்தன என்றாலும் அவற்றிற்கும் குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்களுக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.
மன்னர் ஆட்சியில் உள்ள நகரங்களைப் பற்றிச் சான்றுகள் இருந்தாலும், குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்கள்தான் இப்போது முன்னே நிற்கின்றன.
நகரம் என்பது நாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய நடுவமாகவும் இருக்கிறது. அதில் வணிகம் என்பது முதன்மைப் பங்காற்றுகிறது. இந்த வணிகமும், சந்தையும்தான் அனைத்தையுமே தீர்மானிக்கின்றன. இந்த அடிப்படையில்தான் நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாகவும், சிற்றூர்களில் குறைவாகவும் காணப்படுகின்றன.
ஏறக்குறைய 369 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சென்னை நகரம், இப்போது மாநகரமாக விளங்குகிறது. எத்தனையோ நகரங்கள் பிற்காலத்தில் காணாமல் போய் உள்ளன. களை இழந்தும் உள்ளன. ஆனால் சென்னை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த வளர்ச்சி யாரை நோக்கியது என்றால் பெருமூச்சு மட்டுமே விடையாக இருக்கிறது.
சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்குத் தொன்று தொட்டு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு என்பதே முதன்மையாக இருக்கிறது. இதுவே சிற்றூர்களுக்கும் நகரங்களுக்கும் பெரிய வேறுபாட்டை நமக்கு கொடுத்துக் கொண்டிக்கிறது.
நகரங்கள் மாநகரங்களாக மாறும் போது பல்வேறு சிக்கல்களையும், அறைகூவல்களையும் சந்திக்கின்றன. இந்தச் சிக்கலைத்தான் இப்போது சென்னையும் சந்திக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பு இன்மை என்று சென்னை திணறிக் கொண்டிருக்கிறது.
சென்னைக்கு வேலை வாய்ப்புத் தேடி வருவோர் (சேதி தொழில் நுட்பம், காப்பீடு, பொறியியல்) நான்கு மாதத்திற்கு ஒரு இலட்சம் பேர். இவர்கள் வேலைவாய்ப்பு முகமைகள் மூலம் வேலை தேடுகின்றனர். இதில் 90,000 முதல் 95,000 பேர் சரியான வேலை கிடைக்காமல் அல்லது அந்தத் துறையில் குறைந்த அறிவு உள்ளவர்களாக உள்ளனர். மீதியுள்ள 5000 பேரில் பத்து விழுக்காட்டினரே நல்ல முறையில் அனைத்து வசதிகளுடன் சென்னையில் தங்கி விடுகின்றனர் என்று அண்மையில் வேலை வாய்ப்பு முகமை எடுத்த கணக்கெடுப்பு சொல்கிறது.
இன்னொரு பக்கம் சிறுநகரங்களில் இருந்தும், சிற்றூர்களில் இருந்தும் சென்னையை நோக்கி வேலையைத் தேடி வந்தபடி உள்ளனர். இப்போது சென்னையில் பெரிய (கார்ப்பரேட்) நிறுவனங்களின் ஊதியமே சென்னை வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. சம்பளம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் பன்னிரண்டு. பதினான்கு மணிநேரம் உழைக்கிறார்கள். எந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் அதில் வேலை செய்கிறவர்களும் திணறுகிறார்கள்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு எல்லாவிதமான ஊழியர்களுக்கும் ஊதியம் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் சென்னையில் வீட்டு வாடகை மிகவும் உயர்ந்து விட்டது. சொந்த வீடு என்பது பெரும் கனவாகவே இருக்கிறது.
வானை முட்டும் கட்டடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம், ஆங்காங்கே மேம்பாலங்கள் என்று பளபளப்பாக இருந்தாலும் ஓர் எளிய குடிமகனின் வாழ்க்கை வினாக் குறியாகவே உள்ளது.
மார்வாடிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், இன்னம் பிற மொழிக்காரர்களுக்கும் சென்னை வாழ்வு கொடுக்குமிடமாக இருக்கிறது. ஆனால் இந்த மண்ணைச் சேர்ந்த தமிழனுக்கு வளமான வாழ்வு இல்லை என்பதே உண்மை.
21.8.2008 அன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னையைச் சுற்றியுள்ள புறநகரில் 5,000 கி.மீ. தொலைவுக்குப் பன்னனாட்டு நிறுவனங்கள் இடம் வாங்குகின்றன என்ற அறிக்கை சென்னை நகர விழாவின் அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்குப் பல பின் விளைவுகளையும், எதிர்காலத்தின் உறுதியின்மையையும் உணர்த்தும்.
சென்னை வார விழா என்பது பழைய சென்னையைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் காண்பித்து விழாவாகக் கொண்டாடினாலும் சென்னையின் மறுபக்கம் இன்னும் கரும்புள்ளியாகவே இருக்கிறது.
இத்தனை ஆண்டுக் காலத்தில் மக்களின் ஏக்கங்கள், பெருமூச்சுகள், எதிர்பார்ப்புகள், அரசியல் நிகழ்வுகள் என்று அத்தனையையும் உள் வாங்கிக் கொண்ட எதுவுமே நடக்காதது போல் சென்னைக் கடற்கரையும் நகரமும் தமிழன் வாழ்வதற்கான இடமாகச் சென்னை இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போலச் சென்னையின் பேரெடுப்பில் தமிழன் காணாமல் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் உண்மை.

1 comment:

த.அரவிந்தன் said...

சென்னையை கெடுத்து குட்டிசுவராகியவர்கள் கிராமவாசிகள்! புரிகிறதா?